நெடுநல்வாடை

இயற்றியவர் : மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர் 
வையகம் பனிப்ப, வலனேர்பு வளைஇப்
பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென
ஆர்கலி முனைஇய கொடுங்கோற் கோவலர்
ஏறுடை இனநிரை வேறுபுலம் பரப்பிப்
புலம்பெயர் புலம்பொடு கலங்கிக் கோடல்
நீடிதழ்க் கண்ணி நீரலைக் கலாவ
மெய்க்கொள் பெரும்பனி நலியப் பலருடன்
கைக்கொள் கொள்ளியர் கவுள்புடையூஉ நடுங்க
மாமேயல் மறப்ப மந்தி கூரப்
பறவை படிவன வீழக் கறவை  10

கன்றுகோ ளழியக் கடிய வீசிக்
குன்றுகுளிர்ப் பன்ன கூதிர்ப் பானாள்
புன்கொடி முசுண்டைப் பொறிப்புற வான்பூப்
பொன்போற் பீரமொடு புதற்புதல் மலரப்
பைங்காற் கொக்கின் மென்பறைத் தொழுதி
இருங்களி பரந்த ஈர வெண்மணற்
செவ்வரி நாரைய டெவ்வாயுங் கவரக்
கயலறல் எதிரக் கடும்புனற் சாஅய்ப்
பெயலுலந் தெழுந்த பொங்கல் வெண்மழை
அகலிரு விசும்பில் துவலை கற்ப  20

அங்கண் அகல்வயல் ஆர்பெயற் கலித்த
வண்தோட்டு நெல்லின் வருகதிர் வணங்க
முழுமுதற் கமுகின் மணியுறழ் எருத்திற்
கொழுமடல் அவிழ்ந்த குரூஉக்கொள் பெருங்குலை
நுண்ணீர் தெவிள வீங்கிப் புடைதிரண்டு
தெண்ணீர்ப் பசுங்காய் சேறுகொள முற்ற
நளிகொள் சிமைய விரவுமலர் வியன்காக்
குளிர்கொள் சினைய குரூஉத்துளி தூங்க
மாட மோங்கிய மல்லன் மூதூர்
ஆறுகிடந் தன்ன அகனெடுந் தெருவிற்  30

படலைக் கண்ணிப் பரேரெறுழ்த் திணிதோள்
முடலை யாக்கை முழுவலி மாக்கள்
வண்டுமூசு தேறல் மாந்தி மகிழ்சிறந்து
துவலைத் தண்துளி பேணார் பகலிறந்து
இருகோட்ட டறுவையர் வேண்டுவயின் திரிதர
வெள்ளி வள்ளி வீங்கிறைப் பணைத்தோள்
மெத்தென் சாயல் முத்துறழ் முறுவல்
பூங்குழைக் கமர்ந்த ஏந்தெழில் மழைக்கண்
மடவரல் மகளிர் பிடகைப் பெய்த
செவ்வி யரும்பின் பைங்காற் பித்திகத்து  40

அவ்வித ழவிழ்பதங் கமழப் பொழுதறிந்து
இரும்புசெய் விளக்கின் ஈர்ந்திரிக் கொளீஇ
நெல்லு மலருந் தூஉய்க் கைதொழுது
மல்லல் ஆவணம் மாலை யயர
மனையுறை புறவின் செங்காற் சேவல்
இன்புறு பெடையடு மன்றுதேர்ந் துண்ணாது
இரவும் பகலும் மயங்கிக் கையற்று
மதலைப் பள்ளி மாறுவன இருப்பக்
கடியுடை வியனகர்ச் சிறுகுறுந் தொழுவர்
கொள்ளுறழ் நறுங்கல் பலகூட்டு மறுக  50

வடவர் தந்த வான்கேழ் வட்டம்
தென்புல மருங்கிற் சாந்தொடு துறப்பக்
கூந்தல் மகளிர் கோதை புனையார்
பல்லிருங் கூந்தல் சின்மலர் பெய்ம்மார்
தண்ணறுந் தகர முளரி நெருப்பமைத்து
இருங்காழ் அகிலொடு வெள்ளயிர் புகைப்பக்
கைவல் கம்மியன் கவின்பெறப் புனைந்த
செங்கேழ் வட்டஞ் சுருக்கிக் கொடுந்தறிச்
சிலம்பி வானூல் வலந்தன தூங்க
வானுற நிவந்த மேனிலை மருங்கின்  60

வேனிற் பள்ளித் தென்வளி தரூஉம்
நேர்வாய்க் கட்டளை திரியாது திண்ணிலைப்
போர்வாய்க் கதவம் தாழொடு துறப்பக்
கல்லென் துவலை தூவலின் யாவரும்
தொகுவாய்க் கன்னல் தண்ணீர் உண்ணார்
பகுவாய்த் தடவில் செந்நெருப் பார
ஆடல் மகளிர் பாடல்கொளப் புணர்மார்
தண்மையிற் றிரிந்த இன்குரல் தீந்தொடை
கொம்மை வருமுலை வெம்மையிற் றடைஇக்
கருங்கோட்டுச் சீறியாழ் பண்ணுமுறை நிறுப்பக்  70

காதலர்ப் பிரிந்தோர் புலம்பப் பெயல்கனைந்து
கூதிர்நின் றன்றாற் போதே மாதிரம்
விரிகதிர் பரப்பிய வியல்வாய் மண்டிலம்
இருகோற் குறிநிலை வழுக்காது குடக்கேர்
பொருதிறஞ் சாரா அரைநாள் அமயத்து
நூலறி புலவர் நுண்ணிதிற் கயிறிட்டுத்
தேஎங் கொண்டு தெய்வம் நோக்கிப்
பெரும்பெயர் மன்னர்க் கொப்ப மனைவகுத்து
ஒருங்குடன் வளைஇ ஓங்குநிலை வரைப்பிற்
பருவிரும்பு பிணித்துச் செல்வரக் குரீஇத்  80

துணைமாண் கதவம் பொருத்தி இணைமாண்டு
நாளடு பெயரிய கோளமை விழுமரத்துப்
போதவிழ் குவளைப் புதுப்பிடி காலமைத்துத்
தாளடு குயின்ற போரமை புணர்ப்பிற்
கைவல் கம்மியன் முடுக்கலிற் புரைதீர்ந்து
ஐயவி யப்பிய நெய்யணி நெடுநிலை
வென்றெழு கொடியோடு வேழஞ் சென்றுபுகக்
குன்றுகுயின் றன்ன ஓங்குநிலை வாயில்
திருநிலை பெற்ற தீதுதீர் சிறப்பின்
தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றத்து  90

நெடுமயி ரெகினத் தூநிற ஏற்றை
குறுங்கால் அன்னமோ டுகளு முன்கடைப்
பணைநிலை முனைஇய பல்லுளைப் புரவி
புல்லுணாத் தெவிட்டும் புலம்புவிடு குரலொடு
நிலவுப்பயன் கொள்ளும் நெடுவெண் முற்றத்துக்
கிம்புரிப் பகுவாய் அம்பண நிறையக்
கலுழ்ந்துவீழ் அருவிப் பாடிறந் தயல
ஒலிநெடும் பீலி ஒல்க மெல்லியல்
கலிமயில் அகவும் வயிர்மருள் இன்னிசை
நளிமலைச் சிலம்பிற் சிலம்புங் கோயில்  100

யவனர் இயற்றிய வினைமாண் பாவை
கையேந் தையகல் நிறையநெய் சொரிந்து
பரூஉத்திரி கொளீஇய குரூஉத்தலை நிமிரெரி
அறுஅறு காலைதோ றமைவரப் பண்ணிப்
பல்வேறு பள்ளிதொறும் பாயிருள் நீங்கப்
பீடுகெழு சிறப்பிற் பெருந்தகை யல்லது
ஆடவர் குறுகா அருங்கடி வரைப்பின்
வரைகண் டன்ன தோன்றல வரைசேர்பு
வில்கிடந் தன்ன கொடிய பல்வயின்
வெள்ளி யன்ன விளங்குஞ் கதையுரீஇ  110

மணிகண் டன்ன மாத்திரள் திண்காழ்ச்
செம்பியன் றன்ன செய்வுறு நெடுஞ்சுவர்
உருவப் பல்பூ ஒருகொடி வளைஇக்
கருவொடு பெயரிய காண்பி னல்லில்
தசநான் கெய்திய பணைமருள் நோன்றாள்
இகன்மீக் கூறும் ஏந்தெழில் வரிநுதல்
பொருதொழி நாக மொழியெயி றருகெறிந்து
சீருஞ் செம்மையும் ஒப்ப வல்லோன்
கூருளிக் குயின்ற ஈரிலை யிடையிடுபு
தூங்கியல் மகளிர் வீங்குமுலை கடுப்பப்  120

புடைதிரண் டிருந்த குடத்த இடைதிரண்டு
உள்ளி நோன்முதல் பொருத்தி அடியமைத்துப்
பேரள வெய்திய பெரும்பெயர்ப் பாண்டில்
மடைமாண் நுண்ணிழை பொலியத் தொடைமாண்டு
முத்துடைச் சாலேகம் நாற்றிக் குத்துறுத்துப்
புலிப்பொறிக் கொண்ட பூங்கேழ்த் தட்டத்துத்
தகடுகண் புதையக் கொளீஇத் துகள்தீர்ந்து
ஊட்டுறு பன்மயிர் விரைஇ வயமான்
வேட்டம் பொறித்து வியன்கட் கானத்து
முல்லைப் பல்போ துறழப் பூநிரைத்து  130

மெல்லிதின் விரிந்த சேக்கை மேம்படத்
துணைபுணர் அன்னத் தூநிறத் தூவி
இணையணை மேம்படப் பாயணை யிட்டுக்
காடி கொண்ட கழுவுறு கலிங்கத்துத்
தோடமை தூமடி விரித்த சேக்கை
ஆரந் தாங்கிய அலர்முலை யாகத்துப்
பின்னமை நெடுவீழ் தாழத் துணைதுறந்து
நன்னுதல் உலறிய சின்மெல் லோதி
நெடுநீர் வார்குழை களைந்தெனக் குறுங்கண்
வாயுறை யழுத்திய வறிதுவீழ் காதிற்  140

பொலந்தொடி தின்ற மயிர்வார் முன்கை
வலம்புரி வளையடு கடிகைநூல் யாத்து
வாளைப் பகுவாய் கடுப்ப வணக்குறுத்துச்
செவ்விரற் கொளீஇய செங்கேழ் விளக்கத்துப்
பூந்துகில் மரீஇய ஏந்துகோட் டல்குல்
அம்மா சூர்ந்த அவிர்நூற் கலிங்கமொடு
புனையா ஓவியங் கடுப்பப் புனைவில்
தளிரேர் மேனித் தாய சுணங்கின்
அம்பணைத் தடைஇய மென்றோள் முகிழ்முலை
வம்புவிசித் தியாத்த வாங்குசாய் நுசுப்பின்  150

மெல்லியல் மகளிர் நல்லடி வருட
நரைவிரா வுற்ற நறுமென் கூந்தல்
செம்முகச் செவிலியர் கைம்மிகக் குழீஇக்
குறியவும் நெடியவும் உரைபல பயிற்றி
இன்னே வருகுவர் இன்துணை யோரென
உகத்தவை மொழியவும் ஒல்லாள் மிகக்கலுழ்ந்து
நுண்சேறு வழித்த நோனிலைத் திரள்கால்
ஊறா வறுமுலை கொளீஇய காறிருத்திப்
புதுவ தியன்ற மெழுகுசெய் படமிசைத்
திண்ணிலை மருப்பின் ஆடுதலை யாக  160

விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலத்து
முரண்மிகு சிறப்பிற் செல்வனொடு நிலைஇய
உரோகிணி நினைவனள் நோக்கி நெடிதுயிரா
மாயிதழ் ஏந்திய மலிந்துவீழ் அரிப்பனி
செவ்விரல் கடைக்கண் சேர்த்திச் சிலதெறியாப்
புலம்பொடு வதியு நலங்கிளர் அரிவைக்கு
இன்னா அரும்படர் தீர விறறந்து
இன்னே முடிகதில் அம்ம மின்னவிர்
ஓடையடு பொலிந்த வினைநவில் யானை
நீள்திரள் தடக்கை நிலமிசைப் புரளக்  170

களிறுகளம் படுத்த பெருஞ்செய் யாடவர்
ஒளிறுவாள் விழுப்புண் காணிய புறம்போந்து
வடந்தைத் தண்வளி எறிதொறும் நுடங்கித்
தெற்கேர் பிறைஞ்சிய தலைய நற்பல்
பாண்டில் விளக்கிற் பரூஉச்சுட ரழல
வேம்புதலை யாத்த நோன்காழ் எ·கமொடு
முன்னோன் முறைமுறை காட்டப் பின்னர்
மணிபுறத் திட்ட மாத்தாட் பிடியடு
பருமங் களையாப் பாய்பரிக் கலிமா
இருஞ்சேற்றுத் தெருவின் எறிதுளி விதிர்ப்பப்  180

புடைவீழ் அந்துகில் இடவயின் தழீஇ
வாள்தோள் கோத்த வன்கட் காளை
சுவல்மிசை யமைத்த கையன் முகனமர்ந்து
நூல்கால் யாத்த மாலை வெண்குடை
தவ்வென் றசைஇத் தாதுளி மறைப்ப
நள்ளென் யாமத்தும் பள்ளி கொள்ளான்
சிலரொடு திரிதரும் வேந்தன்
பலரொடு முரணிய பாசறைத் தொழிலே  188