இனியவை நாற்பது

 இயற்றியவர் : பூதஞ்சேந்தனார்
கடவுள் வாழ்த்து
கண்மூன் றுடையான்தாள் சேர்தல் கடிதினிதே
தொல்மாண் துழாய்மாலை யானைத் தொழலினிதே
முந்துறப் பேணி முகநான் குடையானைச்
சென்றமர்ந் தேத்தல் இனிது.
நூல்
பிச்சைபுக் காயினுங் கற்றல் மிகஇனிதே
நற்சலையில் கைக்கொடுத்தல் சாலவும் முன்னினிதே
முத்தேர் முறுவலார் சொல்லினி தாங்கினிதே
தெற்றவும் மேலாயார்ச் சேர்வு. (1)
உடையான் வழக்கினி தொப்ப முடிந்தால்
மனைவாழ்க்கை முன் இனிது மாணாதா மாயின்
நிலையாமை நோக்கி நெடியார் துறத்தல்
தலையாகத் தான்இனிது நன்கு. (2)
ஏவது மாறா இளங்கிளைமை முன்இனிதே
நாளும் நவைபோகான் கற்றல் மிகஇனிதே
ஏருடையான் வேளாண்மை தானினிது ஆங்கினிதே
தேரிற்கோள் நட்புத் திசைக்கு. (3)
யானை யுடைய படைகாண்டல் முன்இனிதே
ஊனைத்தின் றூனைப் பெருக்காமை முன்இனிதே
கான்யாற் றடைகரை யூர்இனி தாங்கினிதே
மான முடையார் மதிப்பு. (4)
கொல்லாமை முன்இனிது கோல்கோடி மாராயஞ்
செய்யாமை முன்இனிது செங்கோலன் ஆகுதல்
எய்துங் திறத்தால் இனிதென்ப யார்மட்டும்
பொல்லாங் குரையாமை நன்கு. (5)

ஆற்றுந் துணையால் அறஞ்செய்கை முன்இனிதே
பாற்பட்டார் கூறும் பயமொழி மாண்பினிதே
வாய்ப்புடைய ராகி வலவைகள் அல்லாரைக்
காப்படையக் கோடல் இனிது. (6)

அந்தண ரோத்துடைமை ஆற்ற மிகஇனிதே
பந்தம் உடையான் படையாண்மை முன்இனிதே
தந்தையே ஆயினுந் தானடங்கான் ஆகுமேல்
கொண்டடையா னாகல் இனிது. (7)

ஊருங் கலிமா உரனுடைமை முன்இனிதே
தார்புனை மன்னர் தமக்குற்ற வெஞ்சமத்துக்
கார்வரை யானைக் கதங்காண்டல் முன்இனிதே
ஆர்வ முடையவர் ஆற்றவும் நல்லவை
பேதுறார் கேட்டல் இனிது. (8)

தங்க ணமர்புடையார் தாம்வாழ்தல் முன்இனிதே
அங்கண் விசும்பின் அகல்நிலாக் காண்பினிதே
பங்கமில் செய்கைய ராகிப் பரிந்துயார்க்கும்
அன்புடைய ராதல் இனிது. (9)

கடமுண்டு வாழாமை காண்டல் இனிதே
நிறைமாண்பில் பெண்டிரை நீக்கல் இனிதே
மனமாண்பி லாதவரை யஞ்சி யகறல்
எனைமாண்புந் தான்இனிது நன்கு. (10)

அதர்சென்று வாழாமை ஆற்ற இனிதே
குதர்சென்று கொள்ளாத கூர்மை இனிதே
உயிர்சென்று தான்படினும் உண்ணார்கைத் துண்ணாப்
பெருமைபோற் பீடுடையது இல். (11)

குழவி பிணியின்றி வாழ்தல் இனிதே
சுழறும் அவையஞ்சான் கல்வி இனிதே
மயரிக ளல்லராய் மாண்புடையார்ச் சேரும்
திருவுந்தீர் வின்றேல் இனிது. (12)

மான மழிந்தபின் வாழாமை முன்இனிதே
தான மழியாமைத் தானடங்கி வாழ்வினிதே
ஊனமொண் றின்றி உயர்ந்த பொருளுடைமை
மானிடவர்க் கெல்லாம் இனிது. (13)

குழவி தளர்நடை காண்டல் இனிதே
அவர்மழலை கேட்டல் அமிழ்தின் இனிதே
வினையுடையான் வந்தடைந்து வெய்துறும் போழ்து
மனனஞ்சான் ஆகல் இனிது. (14)

பிறன்மனை பின்னோக்காப் பீடினி தாற்ற
வறனுழக்கும் பைங்கூழ்க்கு வான்சோர் வினிதே
மறமன்னர் தங்கடையுள் மாமலைபோல் யானை
மதமுழக்கங் கேட்டல் இனிது. (15)

சுற்றார்முன் கல்வி உரைத்தல் மிகஇனிதே
மிக்காரைச் சேர்தல் மிகமாண முன்இனிதே
எள்துணை யானும் இரவாது தான்ஈதல்
எத்துணையும் ஆற்ற இனிது. (16)

நாட்டார்க்கு நல்ல செயலினி தெத்துணையும்
ஒட்டாரை ஒட்டிக் கொளல் அதனின் முன்இனிதே
பற்பல தானியத்தது ஆகிப் பலருடையும்
மெய்த்துணையுஞ் சேரல் இனிது. (17)

மன்றின் முதுமக்கள் வாழும் பதிஇனிதே
தந்திரத்தின் வாழும் தவசிகள் மாண்பினிதே
எஞ்சா விழுச்சீர் இருமுது மக்களைக்
கண்டெழுதல் காலை இனிது. (18)

நட்டார்ப் புறங்கூறான் வாழ்தால் நனிஇனிதே
பட்டாங்கு பேணிப் பணிந்தொழுதல் முன்இனிதே
முட்டில் பெரும்பொருள் ஆக்கியக்கால் மற்றது
தக்குழி ஈதல் இனிது. (19)

சலவாரைச் சாரா விடுதல் இனிதே
புலவர்தம் வாய்மொழி போற்றல் இனிதே
மலர்தலை ஞாலத்து மன்னுயிர்க் கெல்லாம்
தகுதியால் வாழ்தல் இனிது. (20)

பிறன்கைப் பொருள்வெளவான் வாழ்தல் இனிதே
அறம்புரிந் தல்லவை நீக்கல் இனிதே
மறந்தேயும் மாணா மயரிகள் சேராத்
திறந்தெரிந்து வாழ்தல் இனிது. (21)

வருவா யறிந்து வழங்கல் இனிதே
ஒருவர்பங் காகாத ஊக்கம் இனிதே
பெருவகைத் தாயினும் பெட்டவை செய்யார்
திரிபின்றி வாழ்தல் இனிது. (22)

காவோ டறக்குளம் தொட்டல் மிகஇனிதே
ஆவோடு பொன்னீதல் அந்தணர்க்கு முன்இனிதே
பாவமும் அஞ்சாராய்ப் பற்றுந் தொழில்மொழிச்
சூதரைச் சோர்தல் இனிது. (23)

வெல்வது வேண்டி வெகுளாதா னோன்பினிதே
ஒல்லுந் துணையும்ஒன்று உய்ப்பான் பொறை இனிதே
இல்லாது காமுற் றிரங்கி இடர்ப்படார்
செய்வது செய்தல் இனிது. (24)

ஐவாய வேட்கை யவாவடக்கல் முன்இனிதே
கைவாய்ப் பொருள்பெறினுங் கல்லார்கண் தீர்வினிதே
நில்லாத காட்சி நிறையில் மனிதரைப்
புல்லா விடுதல் இனிது. (25)

நச்சித்தற் சென்றார் நசைகொல்லா மாண்பினிதே
உட்கில் வழிவாழா ஊக்கம் மிகஇனிதே
எத்திறத் தானும் இயைவ கரவாத
பற்றினின் பாங்கினியது இல். (26)

தானங் கொடுப்பான் தகையாண்மைமுன் இனிதே
மானம் படவரின் வாழாமை முன்இனிதே
ஊனங்கொண் டாடார் உறுதி உடையவை
கோள்முறையாற் கோடல் இனிது. (27)

ஆற்றாமை யாற்றென் றலையாமை முன்இனிதே
கூற்றம் வரவுண்மை சிந்தித்து வாழ்வனிதே
ஆக்க மழியினும் அல்லவை கூறாத
தேர்ச்சியின் தேர்வினியது இல். (28)

கயவரைக் கைகழிந்து வாழ்தல் இனிதே
உயர்வுள்ளி ஊக்கம் பிறத்தல் இனிதே
எளியர் இவரென் றிகழ்ந்துரையா ராகி
ஒளிபட வாழ்தல் இனிது. (29)

நன்றிப் பயன்தூக்கி வாழ்தல் நனிஇனிதே
மன்றக் கொடும்பா டுரையாத மாண்பினிதே
அன்றறிவார் யாரென் றடைக்கலம் வெளவாத
நன்றியின் நன்கினியது இல். (30)

அடைந்தார் துயர்கூரா ஆற்றல் இனிதே
கடன்கொண்டுஞ் செய்வன செய்தல் இனிதே
சிறந்தமைந்த கேள்விய ராயினும் ஆராய்ந்து
அறிந்துரைத்தல் ஆற்ற இனிது. (31)

சுற்றறிந்தார் கூறுங் கருமப் பொருள்இனிதே
பற்றமையா வேந்தன்கீழ் வாழாமை முன்இனிதே
தெற்றென இன்றித் தெளிந்தாரைத் தீங்கூக்காப்
பத்திமையிற் பாங்கினியது இல். (32)

ஊர்முனியா செய்தொழுகும் ஊக்கம் மிகஇனிதே
தானே மடிந்திராத் தாளாண்மை முன்இனிதே
வாய்மயங்கு மண்டமருள் மாறாத மாமன்னர்
தானை தடுத்தல் இனிது. (33)

எல்லிப் பொழுது வழங்காமை முன்இனிதே
சொல்லுங்கால் சோர்வின்றச் சொல்லுதல் மாண்பினிதே
புல்லிக் கொளினும் பொருளல்லார் தங்கேண்மை
கொள்ளர் விடுதல் இனிது. (34)

ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரிதல் முன்இனிதே
முற்றான தெரிந்து முறைசெய்தல் முன்இனிதே
பற்றினலாய்ப் பல்லுயிர்க்கும் பாத்தூற்றுப் பாங்கறிதல்
வெற்வேறில் வேந்தர்க்கு இனிது. (35)

அவ்வித் தழுக்கா றுரையாமை முன்இனிதே
செவ்வியனாய்ச் செற்றுச் சினங்கடிந்து வாழ்வினிதே
கவ்வித்தாங் கொண்டுதாங் கண்டது காமுற்று
வவ்வார் விடுதல் இனிது. (36)

இளமையை மூப்பென் றுணர்தல் இனிதே
கிளைஞர்மாட் டச்சின்மை கேட்டல் இனிதே
தடமென் பணைத்தோள் தளிரிய லாரை
விடமென் றுணர்தல் இனிது. (37)

சிற்றா ளுடையான் படைக்கல மாண்பினிதே
நட்டா ருடையான் பகையாண்மை முன்இனிதே
எத்துணையும் ஆற்ற இனிதென்ப பால்படுங்
சுற்றா உடையான் விருந்து. (38)

பிச்சைபுக் குண்பான் பிளிறாமை முன்இனிதே
துச்சி லிருந்து துயர்கூரா மாண்பினிதே
உற்றபே ராசை கருதி அறனொரூஉம்
ஒற்கம் இலாமை இனிது. (39)

பத்துக் கொடுத்தும் பதியிருந்து வாழ்வினிதே
வித்துற்குற் றுண்ணா விழுப்பம் மிகஇனிதே
பற்பல நாளும் பழுதின்றிப் பாங்குடைய
கற்றலிற் காழினியது இல். (40)