உலக நாடுகளில் மக்களால் பேசப்படும் ஆயிரக்கணக்கான மொழிகளில் தமிழ் மொழி மிகவும் பழமையானது, வரலாற்றுச் சிறப்புடையது, இலக்கணத்தாலும் இலக்கியத்தாலும் தன்னிகரற்ற நிலையில் தனிச்சிறப்புடன் விளங்குவது.
தமிழ் மொழி, "என்றிவள் பிறந்தாள் என்றுலகறியா" ஏற்றம் கொண்ட இனிய மொழி, உயர் தனிச் செம்மொழி. மொழிக்கு மட்டுமின்றி அம்மொழியைப் பேசும் வாழ்க்கைக்கும் இலக்கணக் கண்ட மொழி, வானம் அளந்தது அனைத்தும் அளந்திடும் வண்மொழி, முச்சங்கங்கள் கண்ட முதிர்ச்சியான மொழி.
தமிழின் சிறப்பையும், தமிழர்களின் வாழ்வியல் வரலாற்றுச் சிறப்பையும் உலகுக்குப் பறைசற்றும் உயரிய நூல்களில் 'புறநானூறு' முன்னிலையில் உள்ளது.
புறநானூறு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, நம் தமிழகத்தில் விளங்கிய புலவர் பெருமக்கள் அவ்வப்போது பாடிய பாட்டுக்களின் தொகுப்பு. பண்டைத் தமிழகத்தின் அரசியல் வரலாற்றையும், சமூக வரலாற்றையும் அறிவுறுத்தும் அரிய கருவூலம். புறநானூறு பண்டைக் காலத்து வாழ்ந்த பேரரசர்களையும், சிற்றரசர்களையும், வீரர்களையும், புலவர் பெருமக்களையும் போற்றிக் காட்டும் ஒரு வரலாற்றுப் பெட்டகம் புறநானூறு! பல வீரவழிபாட்டு முறைகளையும், சமூகப் பழக்கவழக்கங்களையும் பறைசாற்றும் பைந்தமிழ் முரசு புறநானூறு! புவியில் புகழோடு பொருளான வாழ்க்கை வாழ மனிதனுக்குக் கிடைத்த பொன்னெறிகளின் பூக்காடு இப்புறநானூறு! அறக் கோட்பாடுகளும் மனிதநேயக் கொள்கைகளும், வேண்டும் விழுப் பொருள்களின் பரிமாணங்களும் கொண்டு உலகை வாழச் செய்து உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஓர் ஒப்பற்ற தத்துவச் சாத்திரம் இப்புறநானூறு! எழுதப்பட்டு ஈராயிரம் ஆண்டுகள் கடந்தாலும், எக்காலத்துக்கும் எல்லா மக்களுக்கும் ஏற்ற இனிய கொள்கைகளின் ஊற்றாக தத்துவ அமுதத்தினைத் தந்து கொண்டிருக்கும் தலை சிறந்த நூல் இப்புறநானூறு.
கடைச்சங்க நூலாகக் கருதப்படும் புறநானூறு, முச்சங்க காலத்துப் பாடல்களும் கொண்டு விளங்கும் ஒரு காலக் கண்ணாடி. எட்டுத்தொகையில் ஆறு அக நூல்களும் இரண்டு புற நூல்களும் உள்ளன. பதிற்றுப்பத்தும் புறநானூறும் எட்டுத்தொகையில் புறத்துறை நூல்களாகும்.
புறநானூற்றில் அறம் மற்றும் பொருள் சார்ந்த வாழ்க்கைக்கு இன்றியமையாத மறம், மானம், 'மாண்டவழிச் செலவு' தோற்றம் முதலிய நற்பண்புகளும், கடமையும், 'உற்றுழி உதவி ஊக்கும் உயர்திறமும்' 'உயிரோடு கெழுமிய செயிர்தீர் நட்பும்' செங்கோண்மையும், கடவுட்பற்றும், பகைவரை வென்று புகழ் பெருக்கும் வாழ்க்கைத் திறனும் வெகுவாகப் பேசப்படுகின்றன. பேசப்படும் இவையே, உழவு, வாணிகம், அரசியல், பொருளாக்கம், ஒற்றுமை, குழு உயர்வு, கலைப்பண்பு முதலியன வளர்ந்தோங்க வழி செய்திருக்கின்றன. பண்டைத்தமிழ் மக்களின் நல்லொழுக்கத்தையும் சீரிய நாகரிகப் பண்பாட்டையும் தெரிந்து தெளியப் புறநானூறு பெரிதும் உதவுகிறது.
பண்டைத் தமிழகத்தின் அரசியல் வரலாற்றையும், சமூக வரலாற்றையும் அறிவுறுத்தும் அரிய கருவூலமாகப் புறநானூறு பொலிகிறது. பண்டைக் காலத்துப் பேரரசர்களையும், சிற்றரசர்களையும், வீரர்களையும் எடுத்தியம்பும் நோக்கமுடைய பாடல்கள் புறநானூற்றில் மிகுதியாக நம்மால் காண இயலும். புறநானூற்றுப் பாடல்கள் தோன்றிய காலம்தான் 'தமிழகத்தின் வீரயுகம்' என்று சிறப்பித்து சொல்லத்தக்க பொற்காலமாகும்.
தனி மனிதன் தன் வாழ்க்கையினை உயர்த்திக் கொள்ளத் தேவையான உயர் நெறிகள் புறநானூற்றில் நிரம்ப உள்ளன.
அரசியல் வித்தகர்களின் அரசியல் ஞானத்தை மேம்படுத்தும் அளப்பறிய தத்துவங்களைத் தன்னகத்தே கொண்டு விளங்கும் தன்னிகரற்ற நூல் புறநானூறு. சமுதாய உயர்விற்கான வழிகள் புறநானூற்றுப் பாடல்களில் புதையலாய்ப் பொதிந்து கிடக்கின்றன. நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் புதிய தத்துவங்கள் புறநானூற்றிலே பொலிகின்றன. உலகத்தை வாழ வைத்துக்கொண்டிருக்கின்ற விழுப் பொருள்களான அன்பு, அறம், அருள், கொடை, ஈகை, கடமை, வீரம், தியாகம், நன்றி முதலியன புறநானூற்றின் உயிர்ப்பொருளாய் ஊடுருவி உள்ளன. உலகின் இயற்கையை உணர்த்தி உலகில் மனிதன் கைக்கொள்ள வேண்டிய உயர்ந்த நெறிகளை உணர வைக்கின்றன புறநானூற்றின் பாடல்கள் பல. இர்ண்டாவது உலகப் போர்க்குப் பிறகு அரசியலை ஆய்ந்த அறிஞர்கள் உலக மக்களுக்கு இன்றியமையாததாய் வேண்டப்படுகின்ற பேச்சுரிமை, வழிபாட்டுரிமை, அச்சமின்மை, வறுமையின்மை ஆகிய நால்வகை உரிமைகளை வலியுறுத்தி அத்லாந்திக் சார்ட்டர் (Atlantic Charter) என்ற உரிமை ஆவணம் வகுத்ததை வரலாறு காட்டுகிறது. இந்நான்கு உரிமைகளும் உடையவர்களாய்ப் பண்டைக் காலத்திலேயே தமிழ்நாட்டு மக்கள் விளங்கியதைக் காட்டும் பேரிலியக்கியமே புறநானூறு என்றால் சிறிதும் மிகையில்லை. இருபதாம் நூற்றாண்டில் மக்களுக்கு வேண்டப்படும் உரிமைகளை வலியுறுத்தி சங்க காலத்திலேயே பாடிய புறநானூற்றுப் புலவர்களின் திறனும் அரசியல் ஞானமும் போற்றத்தக்கன.
புறப்பொருள் பற்றிய நானூறு பாடல்களைக் கொண்ட தொகுதி ஆதலால் புறநானூறு எனும் பெயர் பெற்றது. புறம், புறப்பாட்டு, புறம்பு நானூறு என்னும் பெயர்களாலும் இந்நூல் வழங்கப்படுகின்றது.
இந்நூலில் கடவுள் வாழ்த்து உட்பட 400 பாட்ல்கள் உள்ளன. ஆனால் சில ஆராய்ச்சியாளர்கள் கடவுள் வாழ்த்துப் பாடல்கள் இல்லாமல் 400 பாடல்கள் இந்நூலில் இருந்திருக்கக் கூடும் என்று கருதுகின்றனர். இவற்றுள் 267, 268ஆம் பாடல்கள் முற்றும் மறைந்து போயின. 266ஆம் பாடலுக்கு மேற்பட்ட பிற்பகுதிப் பாடல்கள் பலவற்றின் அடி, சீர் முதலியனவும், பாடல்களின் பிற்குறிப்புகளில் பெரும்பாலானவும் சிதைவுபட்டுள்ளன.
புறநானூற்றில் இடம் பெற்றுள்ள பாடல்களைப் பாடியவர்கள் 156 புலவர்கள் ஆவர். புறநானூற்றின் முதல் 266 பாடல்களுக்கு உரிய பழைய உரை கிடைத்துள்ளது. சில பாடல்களுக்கு எழுதப்பட்ட இவ்வுரைக் குறிப்பிலிருந்து இவ்வுரைக்கும் முற்பட்ட உரை ஒன்று இந்நூலுக்கு இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. அந்த மிகப் பழைய உரை நமக்குக் கிடைக்கைவில்லை.
இந்துமாக்கடல் தோன்றுவதற்கு முன்னரே படைக்கப்பட்ட பல பாடல்களும், பாரத இராமாயண நிகழ்ச்சிகளுக்கு முன்னரும், பின்னரும் தோன்றிய பாடல்களும், திருவேங்கடத்தில் திருமலைக் கோவிலும், பழனியில் முருகன் கோவிலும், இராமேச்வரத்தில் இராமலிங்கர் கோவிலும் தோன்றுவதற்கு முன்பே தோன்றிய பாடல்களும், சிலப்பதிகாரமும், மணிமேகலையும் படைக்கப்ப்டுவதற்கு முன்பே படைக்கப்பட்ட பாடல்களும் கொண்டு புறநானூறு தன் தொன்மையை உல்குக்குப் பறைசாற்றி வருகிறது.
மிகப்பழமையான நூலாகக் கருதப்படும் தொல்காப்பியத்துக்கு முன்னர் தோன்றிய செய்யுட்களைக் கொண்டுள்ள புறநானூறு, தமிழ்ப் பண்பாட்டின் தொன்மையினை உணர்த்தும் ஒரு பெருநூல் என்றால் சற்றும் மிகையாகாது.
புலவர்கள் மட்டுமின்றி மன்னர்களும் சிறந்த சிந்தனையாளர்களாக விளங்கினார்கள். தமிழ்ப் புலமையோடு அவர்களால் படைக்கப்பட்ட பல புறநானூற்றுப் பாடல்கள் தமிழையும் ஆண்டு, அதற்கு அடிமையான அரசர்களின் திறத்தினையும் காட்டி நம்மை வியக்க வைக்கின்றன.
இன்றைய நிலையில் தனி மனித வாழ்வில் மட்டுமின்றிப் பொதுநல வாழ்விலும் சிக்கல்கள் எழும்போது அச்சிக்கல்களைப் போக்குகின்ற தீர்வுகள் பல புறநானூற்றிலே காணப்படுகின்றன.
இத்தகைய சிறப்புக்களைக் கொண்ட புறநானூற்றில் எந்த நாட்டுக்கும், எந்த மொழிக்கும், எந்த மக்களுக்கும், எந்தக் காலத்திற்கும் தேவையான பொன்னெறிகள் பல பேசப்பட்டுள்ளன. அப்பொன்னெறிகள் மக்களை, நாட்டை, மொழியை, சமுதாயத்தை என்றும் உயர்த்தி மேம்பாடு அடையச் செய்வன.
புறநானூற்றுத் தத்துவங்கள் புவியில் மனித குலத்தை, மனிதத்தை வாழ்விக்க வல்லன.
ஆட்சித்திரன் சிறக்க...
நாடாள்வோர் எத்தகைய தன்மைகளைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும், எத்தன்மைகள் இருந்தால் அரசாள்வோர் மக்கள் போற்றுகின்ற மாமன்னர்களாக இருப்பர் என்பதைப் புறநானூற்றின் கடவுள் வாழ்த்துக்குப் பின்வரும் முதற்பாட்டு குறிப்பிடுகின்றது
சேரமன்னனான பெருஞ்சோற்றுதியன் சேரலாதனின் ஆட்சிச் சிறப்பைப் பாட முற்பட்ட முர்ஞ்சியூர் முடிநாகனார், மன்னனின் சிறப்புகளாகக் கூறும் பண்புகள் பொதுவாக ஓர் ஆட்சியாளர் கைக்கொள்ள வேண்டிய பண்புகளாகவே உள்ளன. நிலம், நீர், ஆகாயம், காற்று, தீ ஆகிய பஞ்சபூதங்களின் தன்மைகளைக் கொண்டு சேரமான் பெருஞ்சோற்றுதியன் ஆட்சி புரிகின்றானாம்.
'அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல் தம்மை
இகழ்வார் பொறுத்தல் தலை'
என்று நம்மைக் கீறி இகழ்பவரையும் இந்த நிலம் தாங்கி நிற்கும். இந்த நிலத்தைப் போலவே இகழ்பவரையும் பொறுத்தல் மனிதர்க்குத் தலையாய பண்பு எங்கிறது உலகப் பொதுமறை.
சேரமான் பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் அகழ்வாரைத் தாங்கும் நிலத்தினுடைய பண்பினைக் கொண்டிருக்கிறான் என்கிறார் முடிநாகனார். பகைவர் பிழை செய்தால் அப்பிழையைப் பொறுப்பதால், அகழ்வாரைத் தாங்கும் நிலத்தின் பண்பினைக் கொண்டுள்ளானாம் மன்னன் பெருஞ்சோற்றுதியன். மேலும், அவன் பகைவன் செய்த பிழைகள் பொறுக்குமளவு அல்லவாயின் பகைவனை அழித்தற்குச் செய்யும் சூழ்ச்சித் திறன் வானத்தைப் போல எல்லையில்லாமல் கொண்டுள்ளானாம். காற்றினைப் போலப் பகைவரை அழித்தற்கேற்ற மனவலிமையும் சதுரங்க வலிமையும் கொண்டுள்ளானாம் சேரலாதன்.
அனைத்தையும் எரித்து அழிக்கும் நெருப்பின் திறம், அவன் பகைவரை எதிர்கொண்டு அழித்து ஒழிக்கும் போது வெளிப்படுகிறதாம். அதே நிலையில், பகைவர்கள் தன்னைச் சரணடைந்து வணங்குவார்கள் ஆயின், அவர்களுக்குத் தண்ணீரைப் போல அருள் செய்ய வல்லவனாகப் பெருஞ்சோற்றுதியன் விளங்குகின்றானாம். மொத்தத்தில் அவன் பகைவர் செய்த பிழைகளைப் பொறுத்துக் கொள்ளும்போது 'நிலத்தைப் போலவும், எல்லையின்றிப் பொறுக்க முடியாத அளவுக்குப் பிழைகள் செய்வார்களாயின் அகன்று விரிந்து எல்லையற்ற அவனுடைய சூழ்ச்சித்திறன் வானத்தப் போலவும் அவனுடைய மன வலிமை எத்திசையிலும் சென்று தாக்கக்கூடிய திறன் காற்றைப் போலவும், பகைவரை அழிப்பதில் நெருப்பினைப் போலவும், பகைவரே பணிந்து நிற்பாராயின், அவர்களுக்கு அருள் செய்யும் நிலையால் தண்ணீரைப் போலவும் சேரமான் பெருஞ்சோற்றுதியன் விளங்குகின்றானாம். மொத்தத்தில் பஞ்ச பூதங்களின் தன்மைகளைக் கொண்டு அவன் ஆட்சி செய்கின்றான் என்கிறார் புலவர்.
மண்திணிந்த நீலனும்
நீலன் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித்தலை இய தீயும்
தீ முரணிய நீரும், என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கைபோல
போற்றார்ப் பொறுத்தலும், சூழ்ச்கியது அகலமும்,
வலியும், தெறலும், அளியும் உடையோய்
என சேரமான் பெருஞ்சோற்றுதியன் சேரலாதனை விளிக்கின்றார் புலவர் முரஞ்சியூர் முடி நாகனார்.
மன்னனை விளிக்கின்ற நிலையில் உள்ள இவ்வரிகள், மன்னனின் ஆட்சித் திறனைக் கூறுவதாய் இருந்தாலும், இன்றைக்கு ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்கள், அது நாட்டின் தலைமை அமைச்சர் (பிரதம மந்திரி) தொடங்கி ஓர் அலுவலகத்தில் கடைநிலைப் பணியாளர் வரை, நாடாள்வோர் மற்றும் நிர்வாகப் பணி செய்வோர் கைக் கொள்ள வேண்டிய பண்புகள் இவை எனப் பறைசாற்றுவதாகவே கொள்ள வேண்டியுள்ளது. மேலே சொன்ன ஐம்பெரும்பூதத்தின் இயல்புகள் நிர்வாகிகள் கொண்டிருப்பார்கள் எனில் அவர்களின் நிர்வாகத் திறன் மேம்படும். ஆட்சித் திறம் அகிலம் போற்றச் சிறக்கும்.